Skip to content
Home » வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி கைது… திருச்சியில் பரபரப்பு…

வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி கைது… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமணி என்கிற டேஞ்சர் மணி இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை தங்கமணி என்கிற டேஞ்சர் மணி அருகில் உள்ள வீட்டிற்கு சென்று தனக்கு சொந்தமான மாடு காணாமல் போய் விட்டது. இதனை தங்கள் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என்றும் தற்போது கண்காணிப்பு கேமராவை பார்க்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். மது போதையில் இருந்த தங்கமணி என்கிற டேஞ்சர் மணி அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் தான் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எதிர் தரப்பினர் வீட்டு முன்பு உள்ள சாலையில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டான். இது குறித்து பொன்மலைப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தப்பி ஓடிய தங்கமணி என்கிற டேஞ்சர் மணி வீட்டில் சோதனை செய்தனர். இச்சோதனையில் அவனது வீட்டில் ஒரு நாட்டு வெடிகுண்டும், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த தங்கமணி என்கிற டேஞ்சர் மணியை கைது செய்து போலீஸ் ஸ்டேசனில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் பொன்மலைப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.