தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். மருந்து விற்பனைபிரதி. இவருக்கு ஒரு மகனும், ஹரிணிஸ்ரீ (9) என்ற மகளும் உள்ளனர். இதில், ஹிரிணிஸ்ரீ தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.
பொங்கல் விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் வீட்டின் பின்புறம், நாடியம்மன்கோவில் குளக்கரையில், ஹரிணிஸ்ரீ விளையாடிக்கொண்டு இருந்தார். விளையாடிய போது பந்து அருகில் இருந்த குளத்தில் தவறி விழுந்துள்ளது.
இந்த பந்தை எடுப்பதற்காக ஹரிணிஸ்ரீ குளத்தில் இறங்கியுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக, வழுக்கி விழுந்து நீரில் மூழ்கிய ஹரிணிஸ்ரீ கதறியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்தனர். தகவலறிந்து ஹரிணிஸ்ரீயின் தந்தை சந்திரனும் ஓடிவந்து குளத்தில் விழுந்த தனது மகளை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
அங்கு, ஹரிணிஸ்ரீயை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த பட்டுக்கோட்டை டவுன் போலீசார் விரைந்து வந்து ஹரிணிஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தன் மகளை இழந்து சந்திரன் மகள் உடலை கைகளில் ஏந்தி கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சை கனக்க செய்தது.