குமரி மாவட்டம் பனச்சமூடு அருகே உள்ள வெள்ளச்சிப்பாறை -ஓடவள்ளி பகுதியை சேர்ந்தவர் பைஜூ. (ஆட்டோடிரைவர்). இவரது மகன் சுபின். களியல் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத் தன்று சுபின் பைக் ஓட்டி படிக்கும் ஆர்வத்தில் வீட்டில் இருந்த தந்தையின் பல்சர் பைக்கை ஓட்டி பார்க்க முயன்றுள்ளார்.
அப்போது திடீரென பைக் நிலை தடுமாறி பக்க சுவற்றில் மோதி கீழே விழுந்த சுபின் மீது பைக் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வெளியே வந்த சுபினின் தாயார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெய்யாற்றின்கரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 10 – நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுபின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அருமனை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கபட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.