Skip to content
Home » சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

  • by Senthil

தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டாலும், சித்திரைத் தேரோட்டம்   முக்கியமானது.  சித்திரை மாதம்  முதல் செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும். அதன்படி நாளை காலை  தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேரோட்டத்தையொட்டி இன்றே சமயபுரம்  திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.  காலை முதல்  கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் இருக்கிறது  நம்பர் 1 டோல் கேட் முதல்  கோவில் வரையிலும், அதற்கு  மேல்  சென்னை பைபாஸ் சாலையிலும் தற்காலிக கடைகள்,  குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், அலங்கார பொருட்கள்,  பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்  திறக்கப்பட்டு உள்ளன.

இந்த கடைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே  டாட்டூ   குத்தும் கடைகளும் ஏராளமாக திறக்கப்பட்டு, ஆண்கள், பெண்கள் என  இளசுகள்  டாட்டூ குத்திக்கொள்கிறார்கள்.  தமிழகத்தில் பச்சை குத்துதல் என்ற பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.  அந்த காலத்தில்  பச்சை குத்துதல் மிகவும் வலி நிறைந்ததாக இருந்தது. ஆண்கள் கைகள், அல்லது மார்பில் பச்சைக்குத்துவார்கள். பெண்கள் கைகளில் மட்டுமே பச்சை குத்துவார்கள். அந்த எழுத்துக்கள் பச்சை நிறத்தில் இருந்ததால் அதற்கு பச்சை குத்துதல் என்று  அழைக்கப்பட்டது.

தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பெயர், அல்லது சாமி படங்கள்,  பெயர்கள்,  அல்லது அன்புக்குரியவர்கள் பெயர் என  பச்சைக்குத்திக்கொண்டனர்.

ஆனால் தற்போது  பச்சை குத்துதல் என்பது  மருவி அது ஆங்கிலமயமாகி டாட்டூ  என அழைக்கப்படுகிறது. அத்துடன் கையால் குத்துதல் காலத்திற்கு ஏற்ப  இயந்திரமயமாகி விட்டது.  நொடிப்பொழுதில்  டிசைன் டிசைனாக  பல வண்ணங்களில் குத்துகிறார்கள்.   எழுத்துக்களையும் பல்வேறு வடிவங்களில்  டாட்டூ குத்திக்கொள்கிறார்கள்.  விரும்பிய இடங்களில் எல்லாம் இந்த டாட்டூ குத்துகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள்  டாட்டூ குத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால் இந்த டாட்டூ குத்தும் எந்திரம்  சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி?   தொற்று பரவும் என்பதற்காக ஒருவருக்கு போட்ட  ஊசியை இன்னொருவருக்கு போடுவதில்லை. ஆனால் இந்த டாட்டூ எல்லோருக்கும் ஒரே  இயந்திரத்தில் தான் போடப்படுகிறது. இதனால்   இதைப்போடுகிறவர்களுக்கு தொற்றுகள்  ஏற்படும் அபாயமும் உள்ளது. இதைப்பற்றி யாரும் கவலைப்படாமல்  கூட்டம் கூட்டமாக  இளசுகள் டாட்டூ குத்திக்கொள்கிறார்கள்.

சில நேரங்களில் டாட்டூ குத்தியவர்கள் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். டாட்டூ குத்தும் நபர்கள் யார், எவர் என்று தெரியாது. அவா்கள் இதில்  அனுபவம் உள்ளவர்களா என்றும் தெரியாமல் திருவிழா கூட்டத்தோடு கூட்டமாக  டாட்டூ குத்திக்கொள்கிறர்கள், நாளை  தொற்று ஏற்பட்டால்   என்ன ஆகும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அத்துடன் டாட்டூ குத்துகிறவர்களின் தகுதி குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கி்றார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!