உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உறுப்புகள் கிடைக்காமல் உலகம் முழுவதும் பல லட்சம் நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அதில் வெற்றி கண்டுள்ளனர். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலம், வேமவுத் நகரைச் சேர்ந்தவர் ரிச்சர்டு ஸ்லேமன் (வயது 62). இவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் பாஸ்டனில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
ஆரம்பத்தில் அவருக்கு சில வருடங்கள் டயாலிசிஸ் செய்யப்பட்டது. உடல்நிலை மோசமடையவே, 2018-ல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வேறு ஒரு நபரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தை அவருக்கு பொருத்தினர். ஆனால், 5 ஆண்டுகளில் அந்த உறுப்பு செயலிழந்தது. இதனால் மீண்டும் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர், இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பெற்று கடந்த மாதம் (மார்ச்) 16-ம் தேதி நோயாளி ரிச்சர்டு ஸ்லேமனுக்கு பொருத்தினர்.
அதன்பின்னர் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அவர் வீடு திரும்பும் அளவுக்கு குணமடைந்த நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை (ஏப்ரல்-3) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தனது நோய் மற்றும் சிகிச்சை முறை தொடர்பான தகவலை பார்த்து, குணமடைய வாழ்த்திய அனைவருக்கும், குறிப்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இது தனக்கு மட்டுமல்ல, அவர்களுக்கும் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிப்பதாகவும் ஸ்லேமன் கூறியுள்ளார்.
இந்த செயல்முறையானது உறுப்புகளை ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாற்றும் நவீன அறுவை சிகிச்சைக்கு ஒரு உதாரணம் ஆகும். இதன்மூலம் நோயாளிகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உறுப்புகளை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உறுப்பு பற்றாக்குறை நெருக்கடிக்கு மத்தியில், இந்த உறுப்பு மாற்று சிகிச்சையில் கிடைத்த வெற்றியானது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் எதிர்காலம் இனி இதுவாகத்தான் இருக்கும் என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளது. எனினும், பன்றிகள் அல்லது பிற விலங்குகளிடமிருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகள் பரவலாக கிடைப்பதை உறுதி செய்யும்முன், மேலும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.