சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சி ராணி உள்ளிட்ட 14 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் விறுவிறுப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவலர்களுக்கான வாக்குப்பதிவு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. மாவட்டம் முழுவதும் உள்ள 926 காவலர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினர். இன்று காலை 11.30 மணி அளவில் 93 காவலர்கள் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர். சுமார் 10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இன்றும் நாளையும் காவலர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவலர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து, தங்களது தபால் வாக்குகளை பெற்றுக் கொள்கின்றனர். பின்னர் வருவாய்த் துறையினர் அவர்களுக்கு அடையாள மை வைத்த பின்பு, அங்குள்ள காவல் அதிகாரியிடம் தங்களது தபால் வாக்குக்கான அங்கீகார கையொப்பத்தை பெற்ற பின், தனி இடத்தில் வைக்கப்பட்டுள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் தங்களது வாக்கினை காவலர்கள் மறைமுகமாக செலுத்தி, பின்னர் தபால் பெட்டியில் தங்களது வாக்குகளை அளித்தனர்.
வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ எடுக்கப்படுகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவலர்களின் வாக்குப்பதிவை அரியலூர் மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டார்.