பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டதால் பொதுமக்களின் பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டன. விடுமுறை முடிந்து இன்று தான் வங்கிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 10 நாட்களில் மீண்டும் 4 நாட்கள் வங்கிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 30 மற்றும் 31-ந்தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 28 மற்றும் 29-ந்தேதி வங்கி விடுமுறையாகும். விடுமுறை நாட்களை தொடர்ந்து போராட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால் தொழில், வர்த்தக நிறுவனங்கள், சிறு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஒரே மாதத்தில் 8 நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்பட்டால் மக்களின் பண, காசோலை பரிமாற்ற நடவடிக்கைகள் கடுமையாக தேக்கம் ஏற்படக்கூடும்.
ஏ.டி.எம். சேவைகள் இருந்தாலும் கூட அவை முழுமையான அளவு செயல்படும் என்று கூற இயலாது. இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாஜலம் கூறும்போது…. வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படுகிறது. அதனால் போதுமான அளவிற்கு ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம். சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு காணாவிட்டால் திட்டமிட்ட படி வேலை நிறுத்தம் நடைபெறும். 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடும் நிலை ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். காசோலை பரிவர்த்தனை பல ஆயிரம் கோடி மதிப்பில் தேங்கும். இவ்வாறு அவர் கூறினார்.