சென்னை மயிலாப்பூர் சஞ்சீவி தெருவை சேர்ந்தவர் காவலர் ஆனந்த்(31). இவர் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் டேட்டா எண்டரி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு இவர் தனது காரில் குடும்பத்துடன் வில்லிவாக்கம் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அயனாவரம் நியூஆவடி சாலையில் அருகே வரும் போது அங்கு ஒரு கும்பல் கஞ்சா போதையில் கத்தியுடன் ரோட்டில் ரகளையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சா போதையில் ஒருவர் காவலர் ஆனந்த் கார் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றார்.
இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் காயமடைந்த ஆனந்த் உட்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கார் கண்ணாடியை உடைத்து காவலர் குடும்பத்தினரை தாக்கிய போதை கும்பலை சேர்ந்த அண்ணாநகர் கிழக்கு பகுதியில் வசிக்கும் விஜயகுமார்(19) என்பவனை கைது செய்து அவன் அளித்த தகவலின் பேரில், தப்பி ஓடிய அயனாவரத்தைச் சேர்ந்த சரத்குமார்(25), பிரவீன்(23), ஜோஸ்வா(24), யுவராஜ் (22) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் கஞ்சா போதை கும்பல் ஒன்று காவலர் குடும்பத்தை தாக்கிய சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.