Skip to content

பைனான்ஸ் வசூல் பணம் ரூ.2.58 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை…

அரியலூர் சிறப்பு தாசில்தார் கோவிந்தராசு தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் கலியபெருமாள், காவலர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையிலான பறக்கும்படையினர், அரியலூர் முட்டுவாஞ்சேரி சாலையில் அம்பலவார்கட்டளை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த, அரியலூர் வட்டம் கீழைசனை கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவரிடம் சோதனை இட்டபோது, அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 600 ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்திற்காக வசூல் செய்து வந்துள்ளதாக கூறினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்பதால், பறக்கும் படை அலுவலர் கோவிந்தராஜ் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 600 ரூபாயை பறிமுதல் செய்து, அரியலூர் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமகிருஷ்ணன் வசம் ஒப்படைத்தார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, இப்பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று  அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயபுரம் பகுதியில், தேர்தல் பார்க்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்என்டி பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கருப்புசாமி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து 2ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நிதி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட கடன் தொகைக்கான தவணைத் தொகையை வசூலித்து வந்ததாக கருப்புசாமி கூறிய நிலையில், அதற்கான ஆவணத்தை காட்டாததால் ஒரு லட்சத்து 2000 ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
ஒரே நாளில் இரு இடங்களில் பைனான்ஸ் வசூல் தொகை இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!