கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:
அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். வாஜ்பாய் காலத்திலேயே இங்கிருந்து பாஜக எம்.பியை தேர்வு செய்து அனுப்பினீர்கள். திமுக, காங்கிரஸ் வாரிசு கட்சிகள் எப்போதும் தாங்களே ஆட்சியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் வறுமையை ஒழிப்போம் என்கிறார்கள். இதற்காக பொய்களை சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் வறுமையை ஒழிக்கவில்லை. நாங்கள் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.
பாஜகவால் மட்டுமே தி்முகவை வீட்டுக்கு அனுப்பமுடியும். காங்கிரஸ், திமுக கூட்டணி பல தலைமுறைகளாக பதவியில் இருக்கிறார்கள். இவர்கள் பட்டியலினத்தவர்கள், பின்தங்கியவர்களுக்கு மின்சாரம், தண்ணீர் , வீடு கிடைக்காமல் செய்தனர். ஆனால் பாஜக ஆட்சியில் பட்டியலினத்தவர்களுக்கு இலவச ரேசன் அரிசி வழங்கி வருகிறோம். வாரிசுகளை மட்டுமே பதவிக்கு கொண்டு வருவார்கள் இந்தியா கூட்டணியினர். ஆனால் நாங்கள் ஒரு மலைவாழ் பெண்ணை ஜனாதிபதியாக்கி உள்ளோம். பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளைக்கூட செய்ய வில்லை காங்கிரஸ்.
இந்தியா கூட்டணியினர் இந்தியாவின் திறமையை நம்பவில்லை. நாங்கள் கொரோனா காலத்தில் கொரோனா மருந்து தயாரித்து வெளிநாடுகளுக்கும் அனுப்பினோம். கொரோனா காலத்தில் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்றனர். ஆனால் நாங்கள் தொழில் நிறுவனங்களை காப்பாற்றினோம். இதற்காக தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கினோம்.
கோவை ஜவுளி தொழில் சிறப்பாக நடக்கிறது. ஆனால் மின் கட்டணத்தை உயர்த்தி அந்த தொழிலை முடக்க பார்க்கிறது திமுக. தமிழ்நாட்டின் திறமைகளை வீணடிக்கிறது திமுக. முதலீடுகளை முடக்க நினைக்கிறது திமுக. தமிழகத்திற்கு கேடு விளைவிக்கிறது திமுக. கோவை பகுதியில் நாங்கள் பாதுகாப்பு பெருவழித்திட்டம் அமைக்க இருக்கிறோம். கொங்கு மண்டல வளர்ச்சிக்கு நாங்கள் இன்னும் அதிகமாக பாடுபடுவோம்.
நாங்கள் மாநிலத்தி்ன் வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் நாடு முன்னேறும். ஆனால் காங்கிரஸ் அப்படி செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் தமிழ்நாட்டுக்கு பல லட்சம் கோடிகளை கொடுத்துள்ளோம். ேகாவை உள்பட தமிழ்நாட்டில் 2 இடத்தில் மாதிரி பட்டறை ஆரம்பிக்க இருக்கிறோம்.
இந்தியா கூட்டணி பிரிவினை வாதம் செய்கிறது. திமுகவும் பிரிவினை வாதம் செய்கிறது. இது ஆபத்தானது. திட்டங்களை திமுக அரசு தனது கட்சிகாரர்களுக்கு மட்டுமே செய்கிறது. கோவையில் கூட சில பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் கிடைக்கிறது.
திமுக வெறுப்பு அரசியல் செய்கிறது. தமிழகத்தின் வளர்ச்சி மீது திமுகவுக்கு அக்கறை இல்லை. கோவையில் சங்கமேஸ்வரர் கோயிலில் தீவிரவாத தாக்குதல் நடக்கிறது. இதை தடுக்க வேண்டிய மாநில அரசு , தீவிரவாதிகளை காப்பாற்றுகிறது. 5 ஜி சாதனை படைத்து இருக்கிறோம். ஆனால் திமுக 2ஜியில் ஊழல் செய்தார்கள். நாம் ஊழலை ஒழிப்போம் என்கிறோம். ஆனால் அவர்கள் ஊழலை ஆதரிப்போம் என்கிறார்கள். ஊழல்வாதிகளை ஆதரிப்பது தான் அவர்களது கடமை.
இந்தியாவின் உயிரோட்டமான கச்சத்தீவை திமுகவும், காங்கிரசும் வேறு நாட்டுக்கு கொடுத்தார்கள். அது அவர்கள் தமிழ்நாட்டுக்கு இழைத்த துரோகம். இந்த பாவங்களுக்காக தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். திமுக எப்போதும் அதிகார, ஆணவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலை யார் என்று திமுகவின் ஒரு தலைவர் கேட்கிறார். அந்த அளவு ஆணவம் உள்ளது. இது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஒரு காவல்துறை அதிகாரியாக செயல்பட்டவர். களத்தில் வீரம் காட்டுகிறார் அண்ணாமலை அவரை உங்களுக்கு தெரியவில்லையா?
ஒரு திமுக தலைவர், மோடியை பாரதத்தை விட்டு வெளியேற்றும் தேர்தல் இது என்கிறார். அவருக்கு நான் சொல்கிறேன் இந்த தேர்தல் ஊழலை இந்தியாவை விட்டு அகற்றும் தேர்தல், உங்கள் வாரிசு அரசியலை வெளியேற்றும் தேர்தல். போதை பொருளை விரட்டும் தேர்தல். திமுக பாதுகாக்கும் தேசியத்திற்கு விரோதமான போக்கு, அதை வெளியேற்றும் தேர்தல் .
இவ்வாறு அவர் பேசினார்.