அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி கடைவீதியில் ஆனந்தகுமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டப் பகலில் காரில் வந்த 2 டிப் டாப் ஆசாமிகள் அவரது நகைக் கடைக்கு சென்று நகை வாங்குவது போல் நடித்து, 10 பவுன் சங்கிலியை திருடிக் கொண்டு, தயார் நிலையில் இருந்த காரில் தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து மீன்சுருட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, நகை கடையில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசை தேடி வந்தனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்று வந்தது.அந்த காரை மறித்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, காரில் இருந்த இரண்டு நபர்கள் முன்னுக்கு பின் முரணாக சந்தேகத்திற்கு இடமாக பேசியதுடன் தப்பி ஓட முயற்சித்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் மீன்சுருட்டி நகைக்கடையில் நகை திருடியவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பார், கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பன் மகன் வெங்கடேசன் (29) என்பதும், சென்னை,
கேருகம்பாக்கம்,திருவிக நகரை சேர்ந்தவர் சிவ.அய்யப்பன் மகன் ராமகிருஷ்ணன் (26) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 5 பவுன் செயின் ஒன்றும், மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் மற்றொரு 5 பவுன் செயினை விற்பனை செய்ததாக தெரிகிறது.தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் வேறு ஏதேனும் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.