தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இத்தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி தங்கள் வாக்கு செலுத்துவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஆண்டி மடத்தில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள்
சுதந்திரமாகவும், அச்சமின்றி பாதுகாப்பாகவும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் ஆண்டிமடம் கடை வீதியில் தொடங்கி, முக்கிய வீதிகளில் வலம் வந்த காவல்துறையினர் மக்களிடத்தில் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அரியலூர் மாவட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.