Skip to content
Home » மத்தியில் கூட்டாட்சி வேண்டும்…. மதிமுக தேர்தல் அறிக்கை…. திருச்சியில் வைகோ வெளியீடு

மத்தியில் கூட்டாட்சி வேண்டும்…. மதிமுக தேர்தல் அறிக்கை…. திருச்சியில் வைகோ வெளியீடு

  • by Authour

திமுக கூட்டணியில்  திருச்சியில்  மதிமுக போட்டியிடுகிறது.  இங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன்  துரை வைகோ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  திருச்சியில் இன்று வைகோ மதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசை இந்தியாவிற்கே முன்மாதிரியாக எடுத்து செல்கிறார்.
திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மதிமுகவிற்காக உழைத்து வருகின்றனர்.
அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனி சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆகவே தான் தீப்பெட்டியை தேர்ந்தெடுத்தோம். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மோசடி செய்து விட்டது. சின்னம் ஒதுக்குவதில் 5.9 சதவீதம் வாக்குகள் இருந்தாலே 6ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பம்பரம் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் வேண்டும் என்றே தேர்தல் ஆணையம் செயல்பட்டது. கச்சத்தீவை  இந்தியாவுக்கு திரும்ப தர முடியாது என  இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா கூறி உள்ளார். தமிழ் இனத்தின் முதல் எதிரி டக்ளஸ் தேவானந்தர்.
மதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
மாநில அரசுகள் அதிகாரம் கொண்டதாக விளங்கிட வேண்டும் என்ற அடிப்படையில் மாநில சுயாட்சிக்காகவும் ஒன்றியத்தில் கூட்டாட்சி முறை நிலவவும் உரத்த குரல் கொடுப்போம்.
பாஜக அரசின் சர்வாதிகார மதவாத செயல்பாடுகளை இதர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தடுத்து நிறுத்த மதிமுக முனைப்புடன் பாடுபடும்.
சமூக நீதியை காக்க மதிமுக தொடர்ந்து பாடுபடும்.

உலக பொதுமறையாம் திருக்குறளை ஒன்றிய அரசு தேசிய நூலாக அறிவிக்க
குரல் கொடுப்போம்.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து குரல் கொடுக்கும்.
ஒன்றிய அரசு நதிநீர் படுகை மேலாண்மை சட்ட முன் வடிவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முடிவை எதிர்த்து மதிமுக போராடும். மேக தாதுவில் தடுப்பு அணை கட்டக் கூடாது.
முல்லைப் பெரியாறு கேரளா புதிய அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் ஆய்வு அனுமதியை உடனே ரத்து செய்யவும் புதிய அணை கட்டும் கேரளா அரசின் முயற்சிகளை முழுமையாக முறியடிக்கவும் மதிமுக போராடும்.
விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக விவசாயத்திற்காக தனி நிதிநிலை அறிக்கை வெளியிட ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் மணல் அள்ளுவதற்கு விதித்துள்ள தடை உத்தரவை கண்டிப்பாக நடைமுறைப்படுத்திட வலியுறுத்துவோம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும்.
கல்பாக்கம் ஈணுலையை அகற்ற வேண்டும்.
என்பது உள்பட 74 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர்  உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *