பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண்நேருவை ஆதரித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகிய இருவரும் கொளுத்தும் வெயிலில் பிரசாரம் செய்தனர். அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் அவர்கள் உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தனர்.
அப்போது தொல்.திருமாவளவன் பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் அ.தி.மு.க.வை மட்டும் எதிர்க்கட்சியாக கருதியிருந்தால் தமிழகத்தோடு பிரசாரத்தை நிறுத்தி இருக்கலாம். அகில இந்திய அளவில் பா.ஜ.க.விற்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக “இந்தியா’ கூட்டணியை உருவாக்கி, தற்போது ராகுல் காந்தியோடு பிரசாரம் செய்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் அதானியும்,அம்பானியும் மட்டுமே வளர்ந்துள்ளனர்.
மோடி ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடைகள் இருக்காது. 100 நாள் வேலை திட்டம் இருக்காது.பா.ஜ.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு மிகப்பெரிய பேராபத்து ஏற்படும்.
அம்பேத்கர் வகுத்து வைத்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும்.
அரசியலமைப்புச் சட்டம் சொல்கிற சகோதரம், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு,அரசியல்,நீதி,சமத்துவம் போன்றவைகளுக்கு ஆபத்து என்றும், பா.ஜ.க.விற்கு ஆபத்தாக இருப்பது இந்த அரசியலமைப்புச் சட்டம் என்றும் கருதுகின்றனர். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அந்த சட்டத்தை ஒழித்து விடுவார்கள்.
விவசாயிகளுக்கு எதிராக பா.ஜ.க.சட்டம் கொண்டு வந்துள்ளது. தற்போது தலைநகரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10 ஆண்டுகால
அ.தி.மு.க. ஆட்சியின் ஆதரவோடுதான் பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை பா.ஜ.க.கொண்டு வந்துள்ளது.
சிறுபான்மை வாக்குகளுக்காக அ.தி.மு.க.- பா.ஜ.க. ரகசிய கூட்டணி அமைத்துக் கொண்டு தனித்து நிற்கின்றனர்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார். அமைச்சர் நேரு பேசும்போது, தமிழக முதல்வர் சுட்டிக்காட்டுபவர் தான் பிரதமர் ஆவார். எனவே தமிழகத்தில் 40க்கு 40 மகத்தான வெற்றியைத்தாருங்கள். இந்த தொகுதியில் உதயசூரியனுக்கு அமோக ஆதரவு தாருங்கள். உங்களுக்காக உழைக்க ஒரு நல்ல இளைஞரை இந்த தொகுதிக்கு முதல்வர் அவர்கள் நிறுத்தி இருக்கிறார். அவரை வெற்றிபெறச்செய்யுங்கள். பெரம்பலூர் தொகுதி வளர்ச்சி பெற அருண் நேருவை உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் புதிய பஸ்நி்லையம், காமராஜர் வளைவு உள்ளிட்ட இடங்களிலும் திருமாவளவன், பிரசாரம் செய்தார்.்