அரியலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருடனான (SST) ஆய்வுக் கூட்டம்
மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மைக் கூட்ட அரங்கில், 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பறக்கும் படையினர் (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் (SST) கைப்பற்றுகை (Seizure) குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளதால் சந்தேகத்திற்கிடமான அனைத்து வாகனங்களும் விடுபடாமல் சோதனை செய்யவும், பிராதான சாலை மட்டுமல்லாது அனைத்து கிராம சாலைகளும் சோதனை செய்யப்படவேண்டும் எனவும், அனைத்து வகையிலும் பெறப்படும் புகார்கள் குறித்த உண்மைத் தன்மையினை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், சோதனையின் தரம் மேலும் உயரத்தப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், சந்தேகத்திற்கிடமான இடங்களிலும், புகார்கள் அதிகம் வரப்பெறும் இடங்களிலும் சோதனைச் சாவடி அமைத்து அனைத்து வாகனங்களையும் விடுபடாமல் சோதனை செய்திட நிலையான கண்காணிப்புக் குழுவினர் (SST)-க்கு
100 சதவீதம் கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், அனுமதியின்றி வைக்கப்படும் கொடிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவை ஏதேனும் இருப்பின், அது குறித்த புகாரினை பதிவு செய்திடுமாறும், தனியார் இடத்தில் உள்ள சுவர் விளம்பரங்கள் சம்மந்தப்பட்ட உரிமையாளரிடம் அனுமதி பெற்றபின் வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஊர்ஜிதம் செய்யுமாறும், தேர்தல் விதிமுறைகள் ஏதும் மீறப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்குமாறும், வேட்பாளரால் பிரச்சாரம் செய்யப்படும் வாகனம் மற்றும் பிரச்சாரம் செய்யப்படும் நேரம், இடம் ஆகியவற்றிற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்திடவும் தெரிவிக்கப்பட்டது.
பறக்கும் படையினர் (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் (SST)-களது பணி தேர்தலின் போது மிகவும் இன்றியமையாத பணியாகும். எனவே தேர்தல் நடத்தை விதிமீறல்கள் ஏதுமின்றி தேர்தலை நடத்திட சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) சந்திரசேகர், தேர்தல் பறக்கும் படை குழுவினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.