மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் உள்ள செம்மங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ஒரு சிறுத்தை நடமாடியது. இதைப்பார்த்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரி்வித்தனர். அத்துடன் கண்காணிப்பு காமிராவிலும் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. இதனால் விடிய விடிய சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறை, போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அது கிடைக்கவில்லை. இதனால் நேற்று மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை ட்ரோன்கள் மூலம் சிறுத்தை எங்கே இருக்கிறது என தேடிப்பார்த்தனர். ஆனாலும் சிறுத்தை தென்படவில்லை.சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். வலைகளை எடுத்து கொண்டு செம்மங்குளம் பகுதியில் தெரு தெருவாக வனத்துறையினர் தேடினர். வனத்துறையினருடன் இணைந்து தீயணைப்புத்துறை அலுவலர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று நேற்று காலை முதல் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மயிலாடுதுறை நகரில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை திருச்சம்பள்ளியில் வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 10 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சிறுத்தையை பார்த்தால் 9994884357 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே இன்று காலை ஆரோக்கியநாதபுரம் என்ற இடத்தில் உள்ள கருவைகாட்டில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகி இருந்தது. எனவே அங்கு தான் சிறுத்தை பதுங்கி இருக்க வேண்டும் என கருதி போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு படையினர் அங்கு சென்று உள்ளனர். சிறுத்தையை பார்த்தால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் தேடுதல் பணி நடக்கிறது.
இதற்கிடையே இன்று 2ம் நாளாக 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். மயிலாடுதுறையில்உ ள்ள 4 பள்ளிகளுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தேர்வு நடந்து வருகிறது. துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தவும், அத்து மீறும் பட்சத்தில் சிறுத்தையை சுட்டு பிடிக்கவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். 4 பள்ளிகளிலும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் மாணவர்கள் பரபரப்புடன் காணப்பட்டனர்.