கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதி உள்ளது. இதற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்த முறையும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் தங்கை பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு என்ன? என்பது தெரியவந்துள்ளது. அதன்படி ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள தனது பிரமாண பத்திரத்தில் கையில் ரூ.55 ஆயிரம் ரொக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வங்கிகளில் ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 157 சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதவிர பங்கு சந்தையில் ரூ.4 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 519 உள்ளதாகவும், Mutual fund வழியாக ரூ. 3 கோடியோ 81 லட்சத்து 33 ஆயிரத்து 572 உள்ளதாகவும், தங்க பத்திரம் வழியாக ரூ.15 லட்சத்து 21 ஆயிரத்து 740ம், பிற இன்சூரன்ஸ் உள்ளிட்ட வகைகளில் ரூ.61 லட்சத்து 52 ஆயிரத்து 426 முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு ராகுல் காந்தியிடம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 850 மதிப்பிலான நகைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் மொத்தமாக ரூ.9 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரத்து 264 மதிப்பிலான அசையும் சொத்து ராகுல் காந்தியிடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ராகுல் காந்தியிடம் ரூ.11 கோடியோ 15 லட்சத்து 2 ஆயிரத்து 598 மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. அதன்படி மொத்தம் ராகுல் காந்தியிடம் ரூ.20 கோடியே 39 லட்சத்து 61 ஆயிரத்து 862 மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளது சொத்து வைத்திருந்தாலும் கூட ராகுல் காந்தியிடம் சொந்தமாக கார் மற்றும் வீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.