நாகையில் சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை எடுத்துக்கொண்டு வெளியேறும் அவசரகால வழி அடைக்கப்பட்டு வருவதற்கு, மீனவர்கள் கடும் எதிர்ப்பு; கம்பிவேலி அமைத்ததை கண்டித்து, நம்பியார்நகர் மீனவர்கள் வேலை நிறுத்தம்;
நாகை மாவட்டம் நம்பியார்நகர் கிராமத்தில், சுமார் 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் அங்குள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நம்பியார்நகர் மீனவ கிராமத்திற்கும், புதிய கடற்கரைக்கும் இடையே உள்ள கடல் நீர் தேங்கி நிற்கும் அலத்தில், பேரிடர் காலங்களில் அப்பகுதி மீனவர்கள் தங்களது மீன்பிடி சாதனங்கள் மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் மீனவர்கள் பயன்படுத்தி வந்த அந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம் திடீரென கடந்த
நான்கு நாட்களுக்கு முன் கம்பி வேலி அமைத்து கையகப்படுத்தியுள்ளது. இதையறிந்து கொதித்து எழுந்த நம்பியார் நகர் மீனவர்கள், அந்த இடத்தை கையப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து இன்று நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில், மீனவர்கள் அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை எடுத்துக்கொண்டு வெளியேறும் அவசரகால வழி அடைக்கப்பட்டு வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கம்பிவேலி அமைத்ததை கண்டித்து, நம்பியார்நகர் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றினர்.
பல ஆண்டு காலமாக 15000 மீனவர்கள் பயன்படுத்தி வந்த இடத்தை அரசு திடிரென கையகப்படுத்துவதால், அவசர கால வழியை மீனவர்கள் பயன்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படுவதுடன், மழை வெள்ளத்தின் போது நகரில் இருந்து கடலை நோக்கி வெளியேறும் வடிகால்கள் இதன் மூலம் அடைபட்டு விடும் என்றும் அப்பகுதி மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்விடம் கருதி, கம்பி வேலி அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என நம்பியார் நகர் மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.