வால் நட்சத்திரம்’ என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன ஒரு விண் பொருள் ஆகும். ஒரு வால் நட்சத்திரமானது சூரியகுடும்பத்தின் உட்புற மண்டலத்தை நெருங்கும்போது, சூரியனின் வெப்பத்தால் அதில் உள்ள பனி ஆவியாகி, வால் நட்சத்திரத்தின் கருவைச் சுற்றி ஒருவித ஒளிரும் தன்மைகொண்ட வாயு மற்றும் தூசியால் ஆன வால் போன்ற அமைப்பு உருவாகிறது.
இந்த வால் நட்சத்திரங்கள் காண்பதற்கு அரிதான நிகழ்வாகவும், வானியல் அற்புதங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரக்கூடிய ’12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.
சுமார் 30 கி.மீ. நீள மையப் பகுதியை கொண்ட இந்த வால்நட்சத்திரம், தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாகவும், தொலைநோக்கி உதவியுடன் இதனை பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு அடிவானத்தில் இந்த வால்நட்சத்திரம் தென்படும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்த ’12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ வால்நட்சத்திரமானது 1385-ம் ஆண்டு சீனாவிலும், 1457-ம் ஆண்டு இத்தாலியிலும் தென்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இந்த ஆண்டு ஜூன் மாதம் இது பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு இந்த வால்நட்சத்திரம் இனி 2095-ல் தான் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.