மயிலாடுதுறை நகராட்சி கூறைநாடு அருகில் உள்ளது செம்மங்குளம். இந்த குளத்தில் தற்போது தண்ணீர் இல்லை. வறண்டு கிடக்கிறது. நேற்று இரவு 11 மணிக்கு இந்த குளத்தில் இருந்து ஒரு சிறுத்தை வந்தததை பார்த்ததாக சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது நாய்கள் துரத்தியதால் சிறுத்தை தப்பி ஓடியது.
சிறுத்தை நடமாட்டம் பற்றிய செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பகுதியில் சோதனை செய்தபோது சிறுத்தையின் கால் தடம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததன் பெயரில் உடனடியாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து வனத்துறையினருக்கு போலீசார் தகவல் அளித்தனர். வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடம் என்று உறுதி செய்ததால் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய மயிலாடுதுறை மையப்பகுதியில் சிறுத்தை சுற்றி வருவது அனைவரிடமும் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் உள்ள கூரைநாடு பகுதியில் செயல்படும் பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளிக்கும் , அதன் அருகில் உள்ள இன்னொரு பள்ளிக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்தார். வனத்துறை, தீயணைப்பு துறை ,காவல் துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டு விடும்.பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்று காலை வனத்துறை, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒரு பள்ளி அருகே பன்றி கடித்து கொல்லப்பட்டு கிடந்தது. சிறுத்தை தான் அதை கடித்து கொன்று இருக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி, பள்ளிகள் விடுமுறை விட்டுக்கொள்ளலாம் என பள்ளி நிர்வாகிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பல பள்ளிகள் இன்று விடுமுறை விடப்பட்டன.
மயிலாடுதுறையை சுற்றி எந்தவிதமான காடுகளும் இல்லாத நிலையில் சிறுத்தை எப்படி வந்தது என்பது புதிராக உள்ளது. அத்துடன் மயிலாடுதுறை கூறைநாடு பகுதி்யில் பல வீடுகள் பாழடைந்து மக்கள் புழங்காமல் புதர் மண்டி கிடப்பதாகவும் அங்கு சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்றும் வனத்துறையினர் கருதுகிறார்கள். எனவே மேற்கண்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடப்பதால் மயிலாடுதுறை நகரமே பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.