சினிமா, அரசியல் இரண்டிலும் அதிரடியாக செயல்பட்டு வரும் நடிகர் மன்சூர் அலிகான், வெளிப்படையாக பேசி அடிக்கடி சிக்கலிலும் மாட்டி வருகிறார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய அவர், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய கையோடு, 2024 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதை அடுத்து, தனக்கு கிரிக்கெட் பேட், பலாப்பழம், லாரி சின்னங்கள் ஒதுக்ககோரி தேர்தல் ஆணையத்திடம் மன்சூர் அலிகான் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு பலாப்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இதையடுத்து பலாப்பழத்தை தலையில் வைத்தப்படியே வேலூரில் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மன்சூர் அலிகான் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மக்களிடம் நகைச்சுவையாக பேசி வாக்கு சேகரித்து வருபவர், தான் வெற்றிப் பெற்றால் வேலூர் தொகுதிக்கு என்னவெல்லாம் செய்வேன் என்று மக்களிடம் உறுதியளித்தும் வருகிறார். மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும், ஒவ்வொரு வீதிகளிலும் நேரடியாக மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மன்சூர் அலிகான் மீது, திருப்பத்தூர் பகுதியில் அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.