தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் கீழமை நீதிமன்றம் வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று கூறி ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் அரிமாசுந்தரம் இந்த மனுவை தாக்கல் செய்தார். அப்போது 3 மாததில் வழக்கை முடிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவுக்கும் தடை கோரி இருந்தார்.
வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக வரும் ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.
வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். வழக்கு விசாரணை தொடங்கும்போது அதை பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் உத்தரவில் கூறி இருந்தார்.