நாடாளுமன்ற தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி நிறைவாக 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 135 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். பின்னர் அந்தந்த தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஈரோடு தொகுதியில் அதிகபட்சமாக 16 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். தென் சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 5 பெண்கள் போட்டியிடுகின்றனர். 6 தொகுதிகளில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெறும். ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வேட்பாளர்கள் பெயர் மட்டும் இடம்பெறும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் கூடுதல் எந்திரங்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே இந்த தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. திருவள்ளூர், காஞ்சீபுரம், திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், சிதம்பரம், நாகை, தஞ்சை, தென்காசி ஆகிய 9 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 15 மற்றும் அதற்கு கீழ் உள்ளது. எனவே இந்த 9 தொகுதிகளில் மட்டும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மட்டும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.