தஞ்சையில் தேமுதிக வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக முன்னாள் அமைச்சர் காமராஜ் இன்று தஞ்சை அருகே பள்ளியக்ஹாரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எது முடியுமோ அதை பேச வேண்டும். நாங்கள் எது முடியுமோ அதை தான் பேசுகிறோம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மாபெரும் மக்கள் இயக்கம். இந்த இயக்கத்திற்கு இரட்டை இலை சின்னம் என்பது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வழங்கியது. புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் கட்டிக் காத்த சின்னம் இரட்டை இலை. இவை அனைத்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் இன்று இயங்கி கொண்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி இன்று பெரிய செல்வாக்குடன் தமிழ்நாடு முழுவதும் வலம் வருகிறார். இன்றைய வெற்றி என்பது நாளைய சரித்திரத்தில் கண்டிப்பாக இடம் பெறும். எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான். எடப்பாடி பழனிசாமி யாரிடத்திலும் எந்த நேரத்திலும் பல்லை காட்டுவதற்கான அவசியம் இல்லை. அவர் என்ன நினைக்கிறாரோ அதை தைரியத்துடன் சொல்லக்கூடிய ஒருவர். அவர் இரண்டு பேச்சு எப்போதுமே பேசியதே கிடையாது.
நாங்கள் ஏற்கனவே பிஜேபி உடன் கூட்டணியில் இருந்தோம். திமுகவும் கூட்டணியில் இருந்து உள்ளார்கள் அமைச்சராகவும் இருந்து உள்ளார்கள். நாங்கள் இப்போது கூட்டணியில் இல்லை. கூட்டணியில் இல்லை என்பதை ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். அதிமுக தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தற்போது நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறோம். டிடிவி தினகரனை பொறுத்தவரை அவர் அனாதை ஆகிவிட்டார். அவர் எங்களைப் பொறுத்தவரை ஒரு பொருட்டு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.