கோவை , கோவில்பாளையம் பகுதியில் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் என்ற பெயரில் மது போதை மறுவாழ்வு மையத்தை கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் நடத்தி வருகிறார்.இந்த மறுவாழ்வு மையத்தில் மதுவுக்கு அடிமையான சுமார் 35 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்நிலையில் கரூர் மாவட்டம் சக்தி நகர் காந்தி கிராம பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகன் கிஷோர் (20),கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் கிஷோர் தன்னை வீட்டிற்கு அனுப்புமாறு கூறி அங்குள்ள வார்டன் அரவிந்த், மற்றும் மனநல ஆலோசகர் ஜெபா பிரான்சிஸ் ராஜ் ஆகியோரிடம் தகாத வார்த்தைகள் பேசி கத்தி கூச்சலிட்டுள்ளார், இதனால் அரவிந்த் மற்றும் மறுவாழ்வு நல மைய ஊழியர்கள் கிஷோரை கட்டிலில் வைத்து கைகள் மற்றும் கால்களை பிடித்து கட்டி உள்ளனர். அப்போதும் தொடர்ச்சியாக கிஷோர் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அரவிந்த் மற்றும் ஊழியர்கள் கிஷோரின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர் .இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் கிஷோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மறுவாழ்வு மைய உரிமையாளர் ஜோசப் வார்டன் அரவிந்த் மனநல ஆலோசகர் ஜெபா பிரான்சிஸ் ராஜ் உட்பட்ட நான்கு பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.