தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் நிறுவனர் சலாவுதீன் ஒவைசி எம்.பி.யாக இருந்தார். அவரது மறைவிற்குப் பிறகு தற்போது கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.
இந்த முறை அவரை வெல்ல பா.ஜ.க. சார்பில் சமூக தன்னார்வலரான மாதவி லதா என்பவரை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்தசட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலிலும் தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளது. ஐதராபாத் தொகுதியில் ஒவைசி மற்றும் பா.ஜ.க வேட்பாளரை விட பிரபலமான ஒருவரை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை களமிறக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.
ஒருவேளை சானியா மிர்சா போட்டியிட மறுத்தால் அவரது தந்தை இம்ரான் மிர்சாவை களமிறக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை டெல்லியில் தெலுங்கானாவில் மீதமுள்ள தொகுதி வேட்பாளர்கள் தேர்வு குறித்து மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு தரப்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.