நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல்கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன.
கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. காலை முதல் பிற்பகல் 3 மணி வரை ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
சில இடங்களில் 3 மணிக்கு பிறகு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்பட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. தென்சென்னையில் 28 மனுக்களும், மத்திய சென்னையில் 22 மனுக்களும், வடசென்னையில் 31 மனுக்களும் தாக்கல் ஆகியுள்ளது. இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் 1,749 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் 34 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் 1783 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகி உள்ளன.
கடைசி நாளில் சுயேச்சைகளே அதிக அளவில் மனு தாக்கல் செய்து உள்ளனர். கரூர் தொகுதியில் தான் மிக அதிகமாக 62 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாகையில் மிக குறைவாக 26 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது 13 பேர் 26 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் 30-ந் தேதிக்குள் வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னர் அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும். 30ம் தேதி் மாலை தான் தேர்தல் களத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.