கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் சட்டசபை தேர்தலின் போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிட்டது.
இந்த முறையும் தங்களுக்கு பானை சின்னம் வழங்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் விசிக முறையிட்டது. ஆனால் பதில் இல்லை. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசிக தரப்பில், ‛‛ பானை சின்னம் கேட்டு யாரும் விண்ணப்பிக்காததால் தங்கள் கட்சிக்கு அதை ஒதுக்க வேண்டும் என வாதிட்டது. பின்னர், டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி, ‛‛ கடந்த முறை தேர்தல் கமிஷனின் விதிகளை வி.சி.க., பூர்த்தி செய்யவில்லையே? பானைக்குள் தங்கம் இருக்கிறதா என தெரியவில்லையே” என கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து பானை சின்னம் தொடர்பான வி.சி.க., மனுவை பரிசீலித்து இன்றே தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த தேர்தல்களில் மாநிலத்தில் விசிக ஒரு சதவீதம் அளவிற்கு கூட ஓட்டுக்கள் வாங்கவில்லை. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சியின் நிதி ஆண்டு அறிக்கையை சமர்பிக்கவில்லை. இதனால் பானை சின்னம் ஒதுக்க இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது.