கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு இன்று காலை ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் வங்கேற்க சுமார் 800 காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் காளையாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது பின்னர் மாடுபிடி வீரர்களுக்கு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆவேசத்துடன் பிடித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியின் நடைபெறும் இடத்தினை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.ஜல்லிக்கட்டு போட்டியினை காண கரூர் மாவட்டம் மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஆவாரங்காட்டிலும் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. திருவரங்கம் கோட்டாட்சியர் செல்வம் போட்டியை கொடியைசைத்து துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோயில் காளைகள் முதலில் விடப்பட்டன. பின்னர் அடுத்தடுத்து காளைகள் இறக்கப்பட்டன. பெரும்பாலான காளைகள் மைதானத்தில் வீரர்களிடம் பிடிபடாமல் கெத்து காட்டியதால் ரசிகர்கள் ஆரவாரம் செயதனர். இங்கு மொத்தம் 650 காளைகள் கொண்டுவரப்பட்டு இருந்தது. 300 வீரர்கள் போட்டியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் 63 வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. 700 காளைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. 270 வீரர்களும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். அவர்கள் ஒவ்வொரு சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டனர். இங்கும் போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். இந்த போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். விழாவில் திருவரங்குளம் ஒன்றிய தலைவர் வள்ளியம்மை தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு நிரந்தர வாடிவாசல் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்டு இன்று அது திறக்கப்பட்டு போட்டிகள் நடந்து வருகிறது.