ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் ஆற்றல் அசோக்குமார். தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகப்பெரிய பணக்காரர் இவர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இவர் ஈரோடு காளிங்கராயன்பாளையத்தில் ஒரு குடோனில் சேலைகள் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் அந்த குடோனுக்கு வி்ரைந்தனர்.
குடோனை திறந்து பார்த்தபோது 161 பண்டல்களில் 24 ஆயிரத்து 150 சேலைகள் மற்றும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக வேட்பாளர் அசோக்குமார், குடோன் உரிமையாளர் ரவிச்சந்திரன், மற்றும் யுவராஜ் என 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.