அரியலூர் மாவட்டம், சிறுவளூர் கிராமத்தில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் விவசாயநிலம் உள்ளது. அந்த நிலத்தின் அருகில் அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கும் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் இரண்டு பேருக்கும் அடிக்கடி வாய்க்கால் வரப்பு தகராறு ஏற்படுவது உண்டு. கடந்த
2021ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி சாமிநாதன் வயலுக்கு சென்றிருந்த பொழுது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த சாமிநாதன் மனைவி செல்லப்பாங்கியிடம், கோவிந்தன் மனைவி சின்னபொன்னு தகராறு செய்ததோடு, அவரது மகள் பகதீஸ்வரியை தரக்குறைவாக திட்டி உள்ளார். வயலில் இருந்து வீட்டிற்கு வந்த சாமிநாதனிடம் அவரது மகள் பகதீஸ்வரி தகராறை கூறி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாமிநாதன் கோவிந்தன் வீட்டிற்கு சென்று தகராறு குறித்து கேட்டபோது, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது கோவிந்தன் உருட்டு கட்டையாலும், கோவிந்தனின் மகன் தர்மராஜ் அரிவாளின் பின்புறத்தாலும் சாமிநாதனின் தலையில் அடித்து கொடுங்காயம் ஏற்படுத்தி உள்ளனர்.
இதனால் மயங்கி கீழே விழுந்த சாமிநாதனை அரியலூர் அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.. அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சாமிநாதன் உயிரிழந்தார்.
இதுகுறித்து சாமிநாதனின் மகள் செல்லப்பாங்கி அளித்த புகாரின் பேரில் அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அரியலூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
குற்றம் சாட்டப்பட்ட தந்தை கோவிந்தன் மற்றும் மகன் தர்மராஜ் ஆகிய இருவருக்கும் 10 வருட சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து தந்தை மகன் ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.