கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் சிம்மபுரீஸ்வரர் சமேத சுகந்த குந்தளாம்பிகை கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழமை வாய்ந்த காவேரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கோவிலில் பங்குனி பெருந்திருவிழாவினை முன்னிட்டு இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த மார்ச் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய பங்குனி பெருந்திருவிழாவில் சுவாமி
உற்சவர் அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி யானை, சிம்மம், பூதம், கைலாய வாகனங்களில் திருவீதி உலா கண்டார்.
பங்குனி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சியில் சுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுங்கிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும் தேர் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.