தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை தி்ருச்சியில் பிரசாரம் தொடங்கினார். மதிமுக வேட்பாளர் துரைவைகோ, திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து சிறுகனூரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் முதல்வர் பேசினார். பின்னர் அவர் கார் மூலம் தஞ்சை சென்று இரவில் அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.
இன்று காலை 7 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தஞ்சையில் உள்ள அன்னை சத்யாெ விளையாட்டு மைதானத்திற்கு சென்றார். அங்கு நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் பேசிக்கொண்டே முதல்வரும் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது முதல்வருடன் வேட்பாளர் முரசொலி மற்றும்
நிர்வாகிகளும் சென்றனர்.
நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என முதல்வர் கேட்டார். பின்னர்
அங்கிருந்து காமராஜ் மார்க்கெட்டுக்கு போனார். அங்கு காய்கறிகள் வாங்க வந்த பெண்கள் மற்றும் வியாபாரிகளிடம் முதல்வர் வாக்கு சேகரித்தார். பெண்களிடம் உங்களுக்கு மகளிர் உரி்மைத் தொகை வருகிறதா என முதல்வர் கேட்டார். அதற்கு அந்த பெண்கள் வருகிறது. மிகவும் நன்றி , நாங்கள் உதயசூரியனுக்கு தான் வாக்களிப்போம் என்றனர்.
பின்னர் அங்கிருந்து கீழ வீதிக்கு நடந்து வந்தார். அங்கும் வாக்கு சேகரித்தார். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் முதல்வர், வேட்பாளர் தேநீர் அருந்தினர். பின்னர் 8.10 மணிக்கு முதல்வர் ஓட்டலுக்கு திரும்பினார். முதல்வருடன் தற்போதைய எம்.பி. பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன், மேயர் சண் ராமநாதன் மற்றும் திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.