உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க இன்று சம்மதம் தெரிவித்தார் கவர்னர் ரவி. இன்று காலை இது தொடர்பாக அவர் முதல்வருக்கும், பொன்முடிக்கும் தகவல் தெரிவித்தார். மாலை 3.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் என அதில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை சரியாக 3.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் கவர்னர் மாளிகை வந்தனர். அதற்கு முன்னதாக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அங்கு வந்து விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். முதல்வர் வந்ததும், கவர்னர் ரவி பதவி ஏற்பு விழா நடக்கும் மண்டபத்துக்கு வந்தார்.
அவர் முகத்தில் வழக்கமான சிரிப்பை காணமுடியவில்லை. பதவி ஏற்பு விழா அறிவிப்பை தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா வாசித்ததும், தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. கவர்னர் பொன்முடிக்கு
பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் பொன்முடி கவர்னருக்கும், முதல்வருக்கும் பூக்கூடை வழங்கினார். அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கவர்னருக்கு பூக்கூடை கொடுத்தார். அதைப்பெற்றுக்கொண்டார் கவர்னர். அதையும் பொன்முடியிடம் கொடுக்கும்படி கூறிவிட்டார். முதல்வர் கவர்னரிடம் கைகுலுக்கினார். 5 நிமிடத்தில் பதவி ஏற்பு விழா முடிந்தது.
பதவி ஏற்பு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், உதயநிதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது.