டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கில் தான் ஏற்கனவே அம்மாநில முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து தன்னை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி ஐகோர்ட், கெஜ்ரிவாலை கைது செய்யத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே இப்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டனர். கெஜ்ரிவால் இல்லத்தில் இருக்கும் அமலாக்கத் துறை டீமில் இப்போது 12 அதிகாரிகள் உள்ளதாகவும், அவர்கள் தேடுதல் வாரண்டுடன் அங்கே சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய எட்டு சம்மன்களை மிஸ் செய்து இருந்தார். கடந்த திங்கள்கிழமை டெல்லி ஜல் போர்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அதிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதே மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இப்போது டெல்லி முதல்வரின் இல்லத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். கெஜ்ரிவால் வீட்டில் சில மணி நேரம் சோதனை நடந்த நிலையில், அமலாக்க துறை இப்போது அவரை கைது செய்துள்ளது