பாராளுமன்ற தேர்தலை ஒட்டி உரிய ஆவணமின்றி பொருட்கள், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று நள்ளிரவில் தஞ்சை மேம்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தஞ்சை நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.60 ஆயிரத்து 100 இருந்தது தெரியவந்தது. இது குறித்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பழ வியாபாரி என்பதும், பழங்கள் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததும், ஆனால் அவற்றிற்கு உரிய ஆவணம் இல்லாததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணம் காண்பித்து பணத்தை பெற்று கொள்ளுமாறு வியாபாரிடம் தெரிவித்தனர்.