இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தேர்தலில் பணப்பரிமாற்றங்களை தடுக்கும் வகையில் பறக்கும் படை குழுக்கள் அமைத்து வாகன சோதனைகள் நடத்தப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஆன்டிமடம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரும், பறக்கும் படை அலுவலருமான சுசிலா தலைமையில், அரியலூர் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவியாளர் தமிழரசி மற்றும் ஆயுதப்படை காவலர் முகமது ஆசிப் ஆகியோரை கொண்ட பறக்கும் படை குழுவினர் அஸ்தினாபுரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியே காரில் வந்த
ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரிடம் இருந்து ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அருள்ராஜ் தனது வயலில் விளைந்த முந்திரி கொட்டைகளை விற்பனை செய்து, அதில் கிடைத்த பண மூலம் திருச்சியில் கார் வாங்க செல்வதற்காக இப்பணத்தை எடுத்துச் செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அருள்ராஜ் வசமும் இல்லை. இதனையடுத்து பறக்கும் படை அலுவலர் சுசீலா, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை அரியலூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான ராமகிருஷ்ணன் வசம் ஒப்படைத்தார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தொகையை பெற்றுக் கொள்ளுமாறு அருள்ராஜ் க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.