புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை ( 78). விவசாயமும், காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அமிர்தவல்லி. இவர்களது மகள் சுந்தராம்பாளை, கொத்தக்கோட்டையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நம்பன்பட்டியை சேர்ந்த பிச்சை பழனி என்பவருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் குழந்தைகள் இல்லை. பின்னர் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு 8 வயது ஆகின்றது.
அன்றைய தினம் முதல் 9 ஆண்டுகளாக பொங்கல் சீர்வரிசை பொருட்களை செல்லத்துரை வழங்கி வருகிறார். செல்லத்துரை தனது மகளுக்கு இந்த ஆண்டும் ஒரு கட்டு கரும்பு, தேங்காய், பச்சரிசி, வெல்லம், பூ உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்றார். 78 வயதிலும் கையால் பிடிக்காமல் ஒருகட்டு கரும்பை தலையில் வைத்து சுமந்தநிலையில், 17 கி.மீ. தூரம் சைக்கிளை ஓட்டிச் சென்று மகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.