புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாண்டி சாராயம் மற்றும் மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்க தனிப்படை போலீசார் மாவட்டத்தின் எல்லையான சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியை பலப்படுத்தி வருகின்றனர். தேர்தல் நேரம் என்பதால், தரை வழியில் சென்றால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதை அறிந்த கடத்தல்காரர்கள், கடல் வழியை தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதன்படி காரைக்கால் அடுத்த வாஞ்சூரில் இருந்து நாகை மாவட்டம் நாகூருக்கு பைபர் படகுமூலம் மூட்டை மூட்டையாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார் படகில் மதுபானங்களை கடத்தி வந்தவர்களை பட்டினச்சேரி
வெட்டாறு கரையோரம் மடக்கி பிடித்தனர். அப்போது படகில் ஏராளமான மதுபானங்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து படகில் இருந்து தப்பி ஓட முயன்ற வாஞ்சூர், அமிர்தாநகரை சேர்ந்த அஜித்குமார், மேலவஞ்சூர் மாதாகோவில் தெருவை சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1, ஃபைபர் படகு, 3,இருசக்கர வாகனம் மற்றும் கடத்திவரப்பட்ட 2000 பாட்டில் பாண்டி மதுபானங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்..