மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இதில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர். 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலில் 6 வழக்கறிஞர்கள், 2 முனைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
வாரிசுகள் அடிப்படையில் பார்த்தால் எதிர்பார்க்கப்பட்டதுபோலவே அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியாக வெற்றிபெற்ற கவுதம் சிகாமணிக்கு பதில் அந்த தொகுதி மலையரசன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தஞ்சையில் 6 முறை எம்பியாக இருந்த முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கத்துக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு அத்தொகுதியில் முரசொலி என்பவர் புதுமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தருமபுரி எம்பியாக இருந்த செந்தில்குமாருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மணி என்பவர் வாய்ப்பு பெற்றுள்ளார். சேலம் எம்பியாக இருக்கும் பார்த்திபனுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். தென்காசி தனித்தொகுதியில் இருந்து கடந்த முறை தனுஷ்குமார் என்பவர் வெற்றிபெற்றார். திமுக இளைஞரணியில் உள்ள தனுஷ், அமைச்சர் உதயநிதி பெயரை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கூறி தன்னை உதயநிதியின் ஆதரவாளராகக் காட்டிக்கொண்டார். இம்முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இத்தொகுதி ராணி என்ற பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரத்துக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஈஸ்வரசாமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.