கோவையை சேர்ந்தவர் நூர் முகமது(60). இவர் பொள்ளாச்சி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய கோவையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகம் வந்தார். அப்போது அவர் கையில் சிறிய சவப்பெட்டி ஒன்றையும் கொண்டு வந்தார். மஞ்சள் கலர் துண்டு அணிந்து தலைப்பாகை கட்டி வந்திருந்தார். அது எதற்கு என பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது நூர் முகமது, ஜனநாயகம் செத்துவிட்டது என்பதை சிம்பாலிக்காக சொல்ல இதை எடுத்து வந்தேன் என்றார்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் சவப்பெட்டியை பறிமுதல் செய்தனர். சவப்பெட்டி இல்லாமல் போகமாட்டேன் என போலீசாரிடம் அடம் பிடித்து நூர் முகமது, என்னை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இதுவரை நான் 41 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன. பணம் பெற்றுக்கொண்டு தான் எல்லோரும் வாக்களிக்கிறார்கள். அதனால் தான் ஜனநாயகம் செத்து விட்டது என்கிறேன்.
இவ்வாறு கூறிய நூர் முகமது, திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள புல்தரையில் அமர்ந்து தர்ணா செய்தார். பின்னர் அவர் வேட்புமனு தாக்கல் செய்யாமல் போய்விட்டார்.