பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரக்கூட்டம் சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் இன்று மதியம் நடந்தது. கூட்டத்தில் மத்திய அமைச்சர் முருகன், மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, சரத்குமார், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், ஏ.சி. சண்முகம், பச்சமுத்து, வி.பி. துரைசாமி, கே. பி. ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடி, டாக்டர் ராமதாசுக்கு கைகுலுக்கினார். மோடி அருகில் ராமதாஸ் அமர்ந்திருந்தார்.
தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார். இம்முறை நானூறுக்கும் மேல் என்றும், டாக்டர் ராமதாஸ் அய்யா என்றும் தமிழில் கூறினார். பின்னர் இந்தியில் பிரதமர் மோடி பேசினார். மோடி பேசியதாவது:
தமிழகத்தில் எனக்கும், பாஜகவுக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது. வளர்ச்சி தமிழகத்தை அடைய, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க, 400ஐ தாண்டவேண்டும். ஏப்ரல் 19ல் விழும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கு தான். நம்முடைய என்டிஏ கூட்டணி வலுவாக உருவாகி உள்ளது. பாமக நம்முடைய கூட்டணி்யில் இணைந்து உள்ளது. ராமதாஸ், அன்புமணி தொலைநோக்கு திட்டத்தால் நமக்கு உத்வேகம் கிடைத்துள்ளது. அவர்களை நான் வரவேற்கிறேன்.
நான் பல முறை சேலம் வந்துள்ளேன். இந்த முறை எனக்கு பழைய நினைவுகள் வருகிறது. நான் கைலாஷ் மானசரோவர் யாத்திரை போனபோது சேலத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவர் வந்தார். அவர் என்னுடன் யாத்திரை வந்தபோது சேலத்தை பற்றி சொல்லி இருக்கிறார். அவர் இங்கு உணவகம் நடத்தி வந்தார். அவர் விபத்தில் இறந்து விட்டார்.பாஜக மாநில முன்னாள் தலைவர் லட்சுமணன் சேலத்தை சேர்ந்தவர். அவர் நெருக்கடி நிலையில் கூட கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டார்.
இங்கு வந்தபோது பழைய நினைவுகள் எனக்கு வருகிறது. சேலம் ஆடிட்டர் ரமேஷ் நி்னைவுக்கு வருகிறார். கட்சிக்காக உயிரை கொடுத்தவர். சமூக விரோதிகள் அவரை கொலை செய்து விட்டனர்.(சிறிது நேரம் பேசாமல் அப்படியே நிறுத்தி னார்).காங்கிரஸ், திமுக கூட்டணி எண்ணம் என்ன என்பது தெரிந்து விட்டது. இந்துமதத்தை அழிப்பதே அவர்கள் நோக்கம். இந்து மதத்தில் சக்தி என்பது என்ன என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். சக்தி நிறைந்த பூமி தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் சக்தி என்றால் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, சமயபுரம் மாரியம்மன்.இங்குள்ள கோட்டை மாரியம்மன் கோயிலல் ஓம் சக்தி என்று எழுதப்பட்டுள்ளது. இந்து மதத்தில் சக்தி என்பதற்கு மிகப்பெரிய பொருள் உள்ளது. இதன் ஆன்மீகத்தை சனாதனத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியுமா? திமுக கூட்டணி, மற்ற மதங்களை தாக்குவதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இந்து மதத்தை அவமதிக்கிறார்கள். இதை நாம் எப்படி அனுமதிக்க முடியுமா?
செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்க திமுக கூட்டணி எதிர்த்தார்கள். சக்தியை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள். அதற்கு முதன் முதலாக நீங்கள் தான் வாக்களிக்க போகிறீர்கள். எதிர்க்கட்சிகளின் அழிவு ஏப்ரல் 19ல் தமிழ்நாட்டில் இருந்து தொடங்குகிறது.தமிழ்நாட்டில் பிறந்த சுப்பிரமணிய பாரதி, சக்தியை அன்னையாக வழிபட்டார். நானும் ஒரு சக்தி உபாசகன். நான் பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்த உதவி செய்கிறேன். கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கினோம். பெண்களுக்கு பயன்தரும் எண்ணம் தான் எங்களுக்கு மைய சக்தியாக இருந்து உள்ளது. பெண் சக்தி தான் எனக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் பெண்களுக்கு பல திட்டங்கள் வரும். இது மோடியின் உத்தரவாதம்.
திமுக,காங்கிரஸ் பெண்களை இழிவாக நடத்துகிறார்கள். இதற்கு தமிழ்நாடு தான் சாட்சி. ஜெயலலிதாவை திமுக எப்படி இழிவு படுத்தியது என நினைவு படுத்துங்கள். தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்து போய் உள்ளது. நீங்கள் வழங்கும் தீர்ப்பு திமுகவுக்கு எதிராக இருக்க வேண்டும்.
திமுகவும், காங்கிரசும் ஒரு நாணயத்தின் இருபக்கம். இவர்கள் குடும்ப ஆட்சி செய்பவர்கள், ஊழல் செய்பவர்கள். தமிழ்நாட்டில் திமுக புது டெக்னாலஜி கண்டுபிடித்து உள்ளது. அது 5 ஜி டெக்னாலஜி. 5 ஜி என்பது அவர்களது 5வது தலைமுறை ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். திமுகவின் 2ஜி ஊழல் இந்தியாவை தலைகுனிய வைத்தது.
மக்கள் தலைவர் மூப்பனார் ஐயாவை நினைவு கூருகிறேன். அவர் மட்டும் மனது வைத்திருந்தால் பிரதமர் ஆகி இருக்கலாம். ஆனால் அவரை காங்கிரஸ் குடும்ப ஆட்சி வளர விடவில்லை. அது தான் காங்கிரஸ் கட்சியின் குணம் . பெருந்தலைவர் ஐயா காமராஜ் நேர்மையானவர். நேர்மை என்றால் அவரது முகம் தான் நினைவுக்கு வருகிறது. கல்வியை வளர்க்க பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். அது எனக்கு நல்ல இன்ஸ்பிரேஷனாக இருந்தது.
பாஜக கூட்டணி பல இலக்குகளை அடைந்து கொண்டு இருக்கி்றது. பாஜக அரசு ஆயிரகணக்கான கிலோ மீட்டர் சாலைகள் அமைத்து உள்ளோம். டஜன் கணக்கில் ஐஐடிக்கள், எய்ம்ஸ்கள் கொண்டு வந்துள்ளோம். தமிழகத்தையும் முன்னுக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். பாஜக அரசு இரண்டு பாதுகாப்பு வழித்தடம் அமைக்கிறது. அதில் ஒன்று தமிழகத்தில் வருகிறது. 7 ஜவுளி பூங்கா அமைக்கிறது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைக்கப்படுகிறது. 6 ஆயிரம் கோடியில் எக்கு தயாரிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு வந்தே பாரத் ரயில் வந்து கொண்டு இருக்கிறது.
நம்முடைய கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒவ்வொருவரையும் வணங்கி வரவேற்கிறேன். வலிமையான பாரதத்தை உருவாக்க, நாட்டின் நலன் கருதி இணைந்துள்ள தலைவர்களை இதயபூர்வமாக வரவேற்கிறேன். உங்களின் உழைப்பால் நம் நாடு வளர்ச்சி அடையும். புதிய உயரங்களை தொடும் என மேடையில் இருக்கும் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். ஊழலுக்கு எதிராக நான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகிறேன். பாஜக கூட்டணியினர் அனைவரையும் நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும். தமிழ் மொழியின் பெருமை யாருக்கும் தெரியவில்லை. என் நாட்டின் தொன்மையான மொழி, உலகின் தொன்மையான மொழி தமிழ். அதன் பெருமையை உணர்ந்தும் நான் பேச முடியவில்லை. நான் சில மாதங்கள் இங்கு வந்து இருந்தால் நான் தமிழில் பேச முடியும். நமோ இன் தமிழ் என்ற எக்ஸ் தளத்தில் நான் தமிழில் பேசப்போகிறேன். அதைக்கேட்டு எனக்கு கருத்து தெரிவியுங்கள். நான் மகிழ்ச்சி அடைவேன்.
இவ்வாறு அவர் பேசினார். சுமார் 55 நிமிடங்கள் அவரது உரை இடம் பெற்றது.