மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நிறைவு பெற்று, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதும் முடிவாகியுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த கட்சி போட்டியிட்ட சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் மீண்டும் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இன்று அறிவித்தார்.
இதேபோல் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் 2-வது முறையாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் அறிவிப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், ”இந்த முறை தனிச்சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலை எதிர்கொள்ளும். நாடு முழுவதும் அமைதிப் புரட்சி நடைபெற்று வருகிறது. நாட்டு மக்கள் ஒரு புறமும் சங்பரிவார் கும்பல் ஒரு புறமும் நிற்கிறார்கள்.
இந்த இரு தரப்பிற்கும் இடையிலான யுத்தம் தான் தற்போதைய மக்களவைத் தேர்தல். மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க முன்வர வேண்டும். மின்னணு இயந்திரங்களை வைத்து பாஜக சதி செய்ய முற்படுவதை மக்கள் முறியடிக்க வேண்டும்” என்றார்.