தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான தொகுதிகளுடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுடன் பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி என்பதனை உறுதியாக அறிவித்து விட்டது. பாமக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் பாமக உயர்மட்டக்குழு கூட்டம் இன்று தைலாபுரத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டணத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி, முன்னாள் தலைவர் ஜிகே மணி மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு காரணமாக நாளை சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜ கூட்டணி கட்சிகளின் தேர்தல் கூட்டத்தில் பாமக சார்பில் அன்புமணி கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன..