தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குருங்குளத்தில் இருந்து வந்த மினி லாரியை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ. 83 ஆயிரம் ரொக்கம் இருந்ததும், மினி லாரியை ஓட்டி வந்த பழ வியாபாரி பழங்கள் வாங்குவதற்காக இத்தொகையைக் கொண்டு செல்வதும், ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரிய வந்தது.
இதையடுத்து, ரூ. 83 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதேபோல், தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா அருகே பறக்கும் படை அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் கனரக வாகனத்தில் ரூ. 70 ஆயிரம் ரொக்கம் இருந்ததும், வாகனத்தில் வந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலம் மாவட்டம், வாழப்பாடியிலிருந்து வேதாரண்யத்தில் இருந்து உப்பு மற்றும் கோல மாவு கொள்முதல் செய்வதற்காக இத்தொகையைக் கொண்டு செல்வதும், அதற்குரிய ஆவணங்கள் இல்லாததும் தெரிய வந்தது. இதையடுத்து இத்தொகை பறிமுதல் செய்யப்பட்டு, மேல்முறையீடு அலுவலர் மூலம் தஞ்சாவூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.