Skip to content
Home » தஞ்சை மருத்துவக்கல்லூரியின் விடுதியில் மாணவர் உயிரிழப்பு..

தஞ்சை மருத்துவக்கல்லூரியின் விடுதியில் மாணவர் உயிரிழப்பு..

  • by Senthil

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா பாபுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் அஜித்குமார் (28). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். தேர்ச்சி பெறாத பாடங்களின் தேர்வை எழுதுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமார் மருத்துவக்கல்லூரி விடுதிக்கு வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென அஜித்குமாருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு வாந்தி எடுத்தார். சிறிதுநேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த சக மாணவர்கள் அஜித்குமாரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசாருக்கும், அஜித்குமாரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அஜித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அஜித்குமார் இறந்த தகவலை அறிந்த பெற்றோர், உறவினர்கள் தஞ்சைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்களது மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அஜித்குமார் பெற்றோர், உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் டவுன் டிஎஸ்பி ராஜா பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். தொடர்ந்து திருச்சியில் இருந்து சிறப்பு டாக்டர் வரவழைக்கப்பட்டு அஜித்குமார் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அஜித்குமார் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் போலீசாரின் கோரிக்கையை ஏற்று உடலை பெற்று கொண்டனர். இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!