திருச்சி அடுத்த சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. முதல் சுற்று போட்டி 9 மணி அளவில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து 2ம் சுற்றுப்போட்டி தொடங்கியது. அப்போது ஒரு சிறிய காளை வாடிவாசல் வழியாக விடப்பட்டது. அந்த காளையை 5க்கும் மேற்பட்ட வீரர்கள் மடக்கி பிடித்தனர். அப்போது அந்த காளை சிறிய கன்றாக இருப்பதால் ஒரு வீரர் மட்டுமே பிடிக்க வேண்டும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் மைக்கில் அறிவித்தனர். இதனால் அந்த காளையின் உரிமையாளரும் மைதானத்தில் வந்து ஒருவர் மட்டும் பிடிக்க வேண்டும் என்றார். இதனால் வீரருக்கும், உரிமையாளருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து விரட்டினர்.
அதுபோல காளைகள் கொண்டு வந்து நிறுத்தும் இடத்திலும் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விரட்டி விட்டனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் வந்திருந்தார். அவரது காளையும் போட்டிக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது.