கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே பட்டவாரப்பள்ளியைச் சேர்ந்த பிரகாஷ் (37). இவரது 16 வயது மகள் பாகலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் மாணவி கடந்த 14-ம் தேதி காலை வீட்டியிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என 15-ம் தேதி பாகலூர் போலீசில் தந்தை பிரகாஷ் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் பாகலூர் அருகே அண்ணா நகர் ஏரியில் மாணவி தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் இதுகுறித்து போலீசார் மாணவியின் வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், அந்த கேமராவை சிலர் துணியை போட்டு மறைத்தது தெரியந்தது. பின்னர் நள்ளிரவு மாணவியின் தந்தை பிரகாஷ் டூவீலரில் வீட்டிற்கு வந்தது அதில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசார் மாணவியின் தந்தை பிரகாஷ் மற்றும் தாய் காமட்சி(34) ஆகிய இருவரிடம் தீவிரமாக விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் தங்களது மகளும், முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (23) என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாததால், இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எதிர்ப்பை மீறி சிவா, மாணவியை வீட்டை விட்டு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இது குறித்து மாணவியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் 6 மாதம் சிறையில் இருந்த பிறகு வந்த வெளியே வந்த சிவாவும், மாணவியும் மீண்டும் காதலை தொடர்ந்தனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மாணவியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி, சித்தி மீனாட்சி ஆகியோர் சேர்ந்து மாணவியை தலையில் கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு டூவீலரில் கொண்டு சென்று மாணவியின் உடலை ஏரியில் வீசிவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து பாகலூர் போலீசார் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி, சித்தி மீனாட்சி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.