Skip to content
Home » கன்னியாகுமரியில் மோடி இன்று பிரசாரம்…..அன்புமணி பங்கேற்பாரா?

கன்னியாகுமரியில் மோடி இன்று பிரசாரம்…..அன்புமணி பங்கேற்பாரா?

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இதற்காக இன்று காலை அவர் விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு சென்று பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் மதியம் 12.15 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு  சென்று பாஜ வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

அகஸ்தீஸ்வரம் பிரசார  கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். ஆனால் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொள்வது பற்றி உறுதியான தகவல் இல்லை.  பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் அன்புமணி, இன்னும் கூட்டணியை உறுதி செய்யாததால் அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *