தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கியதில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மார்ட்டினின் Future Gaming and Hotel services என்கிற நிறுவனம் மிக அதிகமாக ரூ.1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2019 முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இதனை அந்நிறுவனம் வாங்கி வழங்கியுள்ளது. சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று பணம் ஈட்டியதாக மார்ட்டின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் சோதனை மேற்கொண்டு கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஏற்கெனவே முடக்கியது. கடந்த ஆண்டு மே மாதம் மட்டும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு ரூ.456.86 கோடி சொத்துக்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளில் மொத்தமாக 22 நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேலாக தேர்தல் பத்திரங்கள் வாங்கி கட்சிகளுக்கு வழங்கியுள்ளன. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து Quick Supply Chain Private Limited ரூ. 410 கோடியும், Haldia Energy Limited ரூ. 377 கோடியும், வேதாந்தா நிறுவனம் ரூ. 375.65 கோடியும், Western UP Power Transmission ரூ. 220 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ. 183 கோடியும், ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம் ரூ. 123 கோடியும், பிர்லா கார்பன் இண்டியா பிரைவேட் நிறுவனம் ரூ. 105 கோடியும், டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ரூ. ரூ. 80 கோடியும், Chennai Green Woifs Private Limited நிறுவனம் ரூ. 15 கோடியும் வழங்கி உள்ளன.